Thursday, December 24, 2015

மாதிரி வினாத்தாள் சி.பி.எஸ்.இ., ரிலீஸ்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது. மார்ச் முதல் வாரத்தில், தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அடிப்படையிலும்
, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அடிப்படையிலும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளன. இதில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் பள்ளிக்கல்வி துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், வினா வங்கி, கூடுதல் வழிகாட்டி புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதை விட ஒரு படி மேலாக, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொது தேர்வுக்கு மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆங்கிலம், ஹிந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், கணிதப்பதிவியல், பொருளியல், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து பாடங்களுக்கும், மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. வினாத்தாள் விவரங்களை, http://cbseacademic.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

Friday, October 2, 2015

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வு: இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம்


சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.2016 மார்ச்சில் நடைபெற உள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், சிபிஎஸ்இ அமைப்பின் இணையதளமான www.cbse.nic.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
அதேபோன்று, இந்தப் பொதுத் தேர்வுகளில் தங்களது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள விரும்புவோரும் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை இ-செலான் மூலம் செலுத்த வேண்டும். தாமதக் கட்டணம் இன்றி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 15 ஆகும்.
இணையம் மூலம் விண்ணப்பிப்பது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1800-11-8002 என்ற எண்ணில் காலை 9.30 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்கள் அழைக்கலாம். சிபிஎஸ்இ பள்ளிகளின் மூலம் 2016 மார்ச்சில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்யும் பணி செப்டம்பர் 2-ஆம் தேதி தொடங்கியுள்ளது. பள்ளிகளின் மூலமாக இந்த விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

Tuesday, September 29, 2015

மாணவர் சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி விவரங்கள் கட்டாயம்: பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. உத்தரவு...


சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி விவரங்களையும் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. அமைப்பு அண்மையில் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
சி.பி.எஸ்.இ. அமைப்பின் இணைப்பைப் பெற்றுள்ள அனைத்துப் பள்ளிகளும் மாணவர் சேர்க்கையின்போது தாய்மொழி குறித்த விவரங்களையும், மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் மாணவர் கற்பிக்க விரும்பும் மொழிகளையும் சேர்க்கைப் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
இதுதொடர்பான தேவையான அனைத்து மாற்றங்களையும் பள்ளி சேர்க்கைப் படிவங்களிலும், பதிவேடுகளிலும் மேற்கொள்ள வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில், ஆங்கிலம், ஹிந்தியுடன் ஏதாவது அரசியல் சாசன சட்டத்தில் நவீன இந்திய மொழிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒன்றை மூன்றாவது மொழியாக குழந்தைகள் கற்கலாம்.
கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் அண்மையில் மூன்றாவது மொழியான ஜெர்மானிய மொழிக்குப் பதிலாக சம்ஸ்கிருத மொழி கொண்டுவரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், குழந்தையின் தாய்மொழி விவரங்களைப் பதிவு செய்வதை சி.பி.எஸ்.இ. கட்டாயமாக்கியுள்ளது.

Tuesday, June 9, 2015

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை இல்லை


இலவச மாணவர் சேர்க்கைக்கான, 25 சதவீத இட விவரங்களை, மெட்ரிக் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. இதில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் பட்டியல் இடம் பெறவில்லை. இந்த பள்ளிகளின் பட்டியல் வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
25 சதவீத ஒதுக்கீடு:மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, அனைத்து தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் இந்திய இடைநிலைக் கல்வியான, ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், மொத்த இடங்களில், 25 சதவீதத்தை, 6 முதல், 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு இலவசமாக ஒதுக்க வேண்டும்.
இச்சட்டத்தை பின்பற்றி, தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளிலும், நுழைவு வகுப்பான,
எல்.கே.ஜி.,யில் இலவச சேர்க்கை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது.ஆனால், தனியார் பள்ளி களில் இலவச மாணவர் சேர்க்கை முறையாக வழங்கவில்லை என்று, சமூக ஆர்வலர், 'பாடம்' அ.நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மூன்று நாட்களில், இலவச மாணவர் சேர்க்கை இட விவரங்களை, இணையதளத்தில் வெளியிட உத்தரவிட்டது.
இதன்படி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தின்,http://tnmatricschools.com/ இணையதளத்தில், இலவச இடங்களின் எண்ணிக்கை, பள்ளி வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு வரும், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதுவரை இந்த இடங்கள் நிரப்பப்படாது. பின், மெட்ரிக் இயக்குனரகம் அறிவிக்கும் தேதியில், பெற்றோர் முன், குலுக்கல் முறையில் யாருக்கு இடம் என முடிவு செய்யப்படும்.
நேற்று அறிவிக்கப்பட்ட பட்டியலில், 32 மாவட்டங்களில் உள்ள, 3,720 பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. சென்னையில், 321 பள்ளிகளின் பட்டியல் இடம் பெற்றுள்ளது.அதேநேரம், சி.பி.எஸ்.இ., மற்றும், ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளின் பட்டியல் இடம் பெறவில்லை. இதுகுறித்து, 'பாடம்' அ.நாராயணன் கூறும்போது, ''தனியார் பள்ளிகளின் பட்டியல் பெயரளவில் வெளியிடப்பட்டுள்ளன.
''சி.பி.எஸ்.இ., பள்ளி களின் பட்டியல் இடம் பெறவில்லை. இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., சென்னை மண்டல இயக்குனர் மற்றும் மெட்ரிக் இயக்குனருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உள்ளேன்,'' என்றார்.
இதற்கிடையே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் காலியிடங்கள் மற்றும் இலவச மாணவர் சேர்க்கை விவரங்களை பட்டியல் எடுக்க, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் வழியாக, மெட்ரிக் இயக்குனர் பிச்சை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
பள்ளிகள் 'எஸ்கேப்!':நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில், பல மெட்ரிக் பள்ளிகளின் காலியிடங்கள் இடம் பெறவில்லை. இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அவை சிறுபான்மை
அந்தஸ்து பெற்றவை' என்றனர். ஆனால், பல பள்ளிகள் சிறுபான்மை அந்தஸ்து பெறாமல், வெறுமனே விண்ணப்பித்து விட்டு, 'எஸ்கேப்' ஆகி விட்டதாகவும், இதற்கு அதிகாரி களே வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும், தகவல்கள் வெளியாகிஉள்ளன. '
மாஸ்டர் டிரெய்னர்ஸ்' திட்டம்: சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட ஆசிரியர்களுக்கு, 'அகாடமிக்' (கல்வி சார்ந்த) பயிற்சி அளிக்க, பல்கலைகள், கல்லுாரிகளின் திறமையான முன்னாள் வேந்தர்கள், முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களை, கவுரவப் பணியில் நியமிக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., இணைச் செயலர் சுதர்ஷன் ராவ் பிறப்பித்துள்ள உத்தரவில், 'சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, மாஸ்டர் டிரெய்னர்ஸ் என்ற பெயரில், கல்வி நிபுணர்கள் வரவேற்கப்படுகின்றனர். விருப்பமுள்ளோர், ஜூலை 3ம் தேதிக்குள், 'ஆன்லைனில்' சி.பி.எஸ்.இ., வாரியத்துக்கு விண்ணப்பிக்கலாம். மண்டல அலுவலகத்தில் கூடுதல் விவரங்கள் பெறலாம்' என, தெரிவித்து உள்ளார்.
ஜூலை 16ல் தனித்தேர்வு :மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, ஜூ, 16ல் தனித்தேர்வு நடக்கிறது.சி.பி.எஸ்.இ., வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களுக்கான, 'கம்பார்ட்மென்டல்' தனித்தேர்வு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, ஜூலை 16ல் நடக்கிறது.இதற்கு விண்ணப்பிக்க, ஜூன் 22ம் தேதி கடைசி நாள். தாமத விண்ணப்பம், தினமும், 10 ரூபாய் கூடுதலாக சேர்த்து, 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முடிவுகள், பிளஸ் 2வுக்கு ஆகஸ்ட், 6ம் தேதியும்; 10ம் வகுப்புக்கு, 13ம் தேதியும் வெளியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, May 26, 2015

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் 9 வகை கிரேடு மதிப்பெண்


சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், மாணவ, மாணவியருக்கு மதிப்பெண்களுடன், கிரேடு முறை என்ற மதிப்பெண் தர வரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில், ஐந்து பாடங்களில், தலா, 100 மதிப்பெண்கள் வீதம், மொத்தம், 500 மதிப்பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரும் தலா, 33 சதவீத மதிப்பெண், செய்முறை மற்றும் தியரி தேர்வுகளில் பெற்றால் தான், அவர்கள் தேர்ச்சி பெற்றதாகக் கருதப்படுகின்றனர். இத்தேர்வில், பாட வாரியாக, மதிப்பெண்களுக்கு ஏற்ப தனித்தனியே கிரேடு முறை வழங்கப்படுகிறது. ஆங்கில எழுத்துக்களில், 'ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2, டி1, டி2, இ' என, ஒன்பது வகை கிரேடு முறை வழங்கப்படுகிறது.இந்த கிரேடு முறையில், டி2க்குக் கீழ், இ கிரேடு பெற்றால், அவர் தேர்ச்சி பெறாதவர் ஆவார். ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர், ஒரு மாத இடைவெளியில் நடக்கும் உடனடித் தேர்வை எழுதலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாதவர், மீண்டும் அடுத்த ஆண்டுத் தேர்வில், அனைத்து பாடங்களையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அதை மீண்டும் எழுதத் தேவையில்லை. பழைய மதிப்பெண்ணே கணக்கில் எடுக்கப்படும். இல்லையென்றால், செய்முறை மற்றும் 'தியரி' தேர்வு இரண்டையும் மீண்டும் அடுத்த கல்வி ஆண்டில் எழுத வேண்டும். மதிப்பெண் பட்டியலுக்கான சான்றிதழில், பாடவாரியாக மதிப்பெண் மற்றும் தனியாக கிரேடு குறிக்கப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்ஜி., 'கட் - ஆப்' கணக்கிடுவது எப்படி?
சமச்சீர் கல்வி மாணவர்களுக்கு இன்ஜினியரிங் படிப்பில் கணிதத்துக்கு, 100;இயற்பியல், வேதியியலுக்கு தலா, 50 மதிப்பெண் கணக்கிடப்பட்டு, மொத்தம், 200க்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு அவர்கள் கணிதத்தில், 100க்கு பெற்ற மதிப்பெண் அப்படியே எடுத்துக் கொள்ளப்படும். இயற்பியல் மற்றும் வேதியியலில், அவர்கள், 100க்கு எடுத்த மதிப்பெண், தலா, 50க்கு என கணக்கிடப்படும் என, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர், அண்ணா பல்கலை பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

Saturday, May 23, 2015

எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர முடியுமா? சி.பி.எஸ்.இ., மாணவர்கள் குழப்பம்


சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு மாணவ, மாணவியர், விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம் நடந்து வருகிறது.
விண்ணப்பிக்க, வரும் 29ம் தேதி கடைசி நாள். மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள், இந்த படிப்புகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வெளியாவதில் தாமதம் ஆகி வருகிறது. இதனால், தாங்கள் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்படுமோ என, சி.பி.எஸ்.இ., மாணவ, மாணவியர் குழப்பம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து, மருத்து மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறியதாவது:
முடிவுகள் தாமதம்:
சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் தாமதம் ஏற்படுவதால், எந்த சிக்கலும் இல்லை. வரும் 28ம் தேதி வரை, விண்ணப்பங்கள் கிடைக்கும்; விண்ணப்பத்தை வாங்கி வைத்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க, 29ம் தேதி வரை அவகாசம் உள்ளது; அதற்கு முன், தேர்வு முடிவுகள் வந்து விடும்; மேலும், தாமதம் ஏற்படும் என்றால், மாற்றாக என்ன செய்வது என்பது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Tuesday, May 19, 2015

ஐ.சி.எஸ்.இ., பிளஸ் 2 'ரிசல்ட்' வெளியீடு


மத்திய அரசின், இந்திய இடைநிலைக் கல்வி பாடத்திட்டமான, ஐ.சி.எஸ்.இ.,க்கான, 10ம் வகுப்பு மற்றும் இந்திய பள்ளிச் சான்றிதழ் - ஐ.எஸ்.சி., பாடத்திட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.ஐ.சி.எஸ்.இ., மற்றும் ஐ.எஸ்.சி., பாடத்திட்டத்துக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு, நாடு முழுவதும் கடந்த மார்ச்சில் நடந்தது.
இந்தியாமற்றும் வெளிநாடு மாணவ, மாணவியர், பிளஸ் 2வில், 72 ஆயிரம் பேர்; 10ம் வகுப்பில், இரண்டு லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள், நேற்று காலை, டில்லில் உள்ள ஐ.சி.எஸ்.இ., கவுன்சில் மூலம், இணையதளத்தில் வெளியிடப்பட்டது.பத்தாம் வகுப்புத் தேர்வில், கோல்கட்டா, மும்பையைச் சேர்ந்த,மூன்று பேர், 500க்கு 496 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்;கோல்கட்டாவை சேர்ந்த மாணவர், பிளஸ் 2வில் முதலிடம் பெற்றுள்ளார்.பத்தாம் வகுப்பில், 98.49 சதவீதம் பேரும், பிளஸ் 2வில் 96.28 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட, மாணவியரே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளதாக, ஐ.சி.எஸ்.இ., கவுன்சில் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை, www.cisce.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Sunday, April 5, 2015

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பாலியல் தொல்லைகளைத் தடுக்க உரிய நடவடிக்கை: வாரியம் உத்தரவு

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ., வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, பள்ளிகளில், பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் குழு அமைக்க வேண்டும். அதில், பள்ளி முதல்வர், ஒரு ஆசிரியர், ஒரு ஆசிரியை, ஒரு மாணவர், ஒரு மாணவி, ஆசிரியர் அல்லாத பள்ளியின் அலுவலர் ஒருவர் இடம்பெற வேண்டும்.
பள்ளி வளாகத்தில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மாணவியர் மற்றும் மாணவர் இடையே பாலின வேறுபாட்டை போக்கும் வண்ணமும், மாணவியரிடம் கண்ணியமாக நடந்து கொள்ளும் முறை குறித்தும் பாடங்கள் எடுக்க வேண்டும்.
மாணவ, மாணவியரிடையே போட்டிகள் வைத்து விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். மாணவ, மாணவியர் புகார் தருவதற்கான புகார் பெட்டி உரிய இடங்களில் அமைக்க வேண்டும்.
கட்டணமில்லா தொலைபேசி எண், பள்ளி ஆசிரியர்களின் தொலைபேசி எண், புகார் தெரிவிக்க வேண்டிய அலுவலரின் எண் போன்றவற்றை அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு பல்வேறு வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

சுற்றறிக்கை வெளியீடு சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பாலியல் பிரச்னைதடுக்க விதிமுறை


சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., வாரியம் உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, பள்ளிகளில், பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் குழு அமைக்க வேண்டும்.
அதில், பள்ளி முதல்வர், ஒரு ஆசிரியர், ஒரு ஆசிரியை, ஒரு மாணவர், ஒரு மாணவி, ஆசி ரியர் அல்லாத பள்ளியின் அலுவலர் ஒருவர் இடம்பெற வேண்டும்.பள்ளி வளாகத்தில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மாணவியர் மற்றும் மாணவர் இடையே பாலின வேறுபாட்டை போக்கும் வண்ணமும், மாணவியரிடம் கண்ணியமாக நடந்து கொள்ளும் முறை குறித்தும் பாடங்கள் எடுக்க வேண்டும்.மாணவ, மாணவியரிடையே போட்டிகள் வைத்து விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.
மாணவ, மாணவியர் புகார் தருவதற்கான, புகார் பெட்டி உரிய இடங்களில் அமைக்க வேண்டும். கட்டணமில்லா தொலைபேசி எண், பள்ளி ஆசிரியர்களின் தொலைபேசி எண், புகார் தெரிவிக்க வேண்டிய அலுவலரின் எண் போன்றவற்றை, அறிவிப்பு பலகையில் இடம் பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு, பல்வேறு வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிறுவனம் சுற்றறிக்கை மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளை கற்பிக்கவேண்டும்

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்புகலைகளை கற்பிக்கவேண்டும் என்றும் பள்ளிக்கூடங்களில் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தவேண்டும் என்றும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நிறுவனம் இந்தியாவில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. நிர்வாகங்களுக்கும், பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
பாதுகாப்பான சூழ்நிலை
அனைத்து குழந்தைகளுக்கும் படிப்பதற்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்று உரிமை உள்ளது. அவர்கள் அனைத்து துறையிலும் வளர்ச்சி அடையவேண்டும். பள்ளிக்கூடங்களில் ஆண், பெண் சமம் என்ற நிலையை உருவாக்கவேண்டும். ஈவ்டீசிங், பாலியல் கொடுமை ஆகியவற்றில் இருந்து குழந்தைகளைபாதுகாக்கவேண்டும். இந்த விழிப்புணர்வை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் ஏற்படுத்தவேண்டும்.குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வை பள்ளிக்கூட நிர்வாகிகளும், அனைத்துஆசிரியர்களும், பள்ளிக்கூட ஊழியர்களும் அறியவேண்டும். பள்ளி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் படிப்பதற்கு நல்ல சூழ்நிலையை பள்ளி நிர்வாகம் உருவாக்கவேண்டும்.வளர் பருவத்தில் உள்ள மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி பயிற்சி அளிக்கவேண்டும்
மாணவிகளுக்கு கராத்தே
மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்பிக்கவேண்டும். மேலும் ஆண்-பெண் சமம் என்பது குறித்த கண்காட்சி, வினா-விடை போட்டியை பள்ளிகளில் நடத்தவேண்டும். விடுதிகளில் மன ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவேண்டும். அவர்கள் மீது தனிப்பட்ட அக்கறை செலுத்தி அவர்களுக்கு உரிய சவால்களை சந்திக்கும் திறனை உருவாக்கவேண்டும்.மாணவ-மாணவிகளுக்கு மேற்கண்டவாறு பிரச்சினை ஏற்பட்டால் புகார் செய்வதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் கமிட்டி அமைக்கப்படவேண்டும். அந்த கமிட்டியில் பள்ளியின் முதல்வர் அல்லது துணை முதல்வர், ஒரு ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியர், ஒரு மாணவி, ஒரு மாணவர், ஒரு ஆசிரியர் அல்லாத ஊழியர் ஆகியோர் இடம் பெறவேண்டும். அந்த கமிட்டியிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புகார் பெட்டி- சி.சி.டி.வி. கேமரா
மேலும் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் புகார் செய்ய, புகார் பெட்டி இருக்கவேண்டும். அந்த பெட்டியில் பாலியல் கொடுமை பற்றி மாணவ-மாணவிகள் ஏதாவதுஎழுத்துப்பூர்வமாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளிக்கூட வளாகங்களில் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படவேண்டும். மாணவர்களை உளவியல் ரீதியாக கவனிக்கவேண்டும். அவர்கள் ஆர்வம் இல்லாமல் இருப்பது, மன அழுத்ததில் இருந்தால் அவர்களுக்கு முறையான உளவியல் ரீதியான கலந்தாய்வு அளிக்கவேண்டும். மேற்கண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வகுப்பறைகளிலும், விடுதிகளிலும், விளையாடும் இடங்களிலும் இருக்கவேண்டும்.
குழந்தைகளுக்கானஹெல்ப் லைன்
குழந்தைகளுக்கான ஹெல்ப் லைன் போன் நம்பர் நோட்டீசு போர்டு உள்பட முக்கிய இடங்களில் எழுதி போடவேண்டும். குறிப்பாக 1098 என்ற நம்பர் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தெரியவேண்டும். பள்ளிக்கூட நிர்வாகம், ஊழியர்கள் மாணவ-மாணவிகளுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thursday, March 5, 2015

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு துவங்கியது
சென்னை: நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நேற்று துவங்கின. தமிழ்நாட்டில், 10ம் வகுப்பில், 29 ஆயிரம் பேரும்; பிளஸ் 2வில், 12 ஆயிரம் பேரும், இத்தேர்வில் பங்கேற்றனர்.தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, டையூ,
டாமன் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய சென்னை (தெற்கு) மண்டலத்தில், 10ம் வகுப்பில், 1.20 லட்சம் பேரும்; பிளஸ் 2வில், 70 ஆயிரம் பேரும், தேர்வில் பங்கேற்றனர்.தமிழகத்தில், 450 பள்ளிகளைச் சேர்ந்த, 12 ஆயிரம் பேர், பிளஸ் 2 தேர்விலும்; 29 ஆயிரம் பேர், 10ம் வகுப்புத் தேர்விலும் பங்கேற்றனர்.

Monday, March 2, 2015

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்: தமிழகத்தில் 46,000 பேர் பங்கேற்பு
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தேர்வுகள் நாடு முழுவதும் திங்கள்கிழமை தொடங்குகின்றன. மார்ச் 2-இல் தொடங்கும் பிளஸ் 2 தேர்வு ஏப்ரல் 20-ஆம் தேதி வரையிலும், 10-ஆம் வகுப்புத் தேர்வு 26-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன. 10-ஆம் வகுப்பில் பள்ளி அளவிலான தேர்வு மார்ச் 10-ஆம் தேதி தொடங்குகிறது.
பிளஸ் 2 தேர்வை தமிழகத்தில் இருந்து 16 ஆயிரம் பேரும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 30 ஆயிரம் பேரும் எழுத உள்ளதாக சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலர் சுதர்சன ராவ் தெரிவித்தார்.
சென்னை மண்டலத்தில் பிளஸ் 2 தேர்வை 70 ஆயிரம் பேரும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 1.7 லட்சம் பேரும் எழுதுகின்றனர்.
தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: 10-ஆம் வகுப்புத் தேர்வை நிகழாண்டு நாடு முழுவதிலும் 3,537 தேர்வு மையங்களிலிருந்து 13,73,853 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வை 3,164 தேர்வு மையங்களிலிருந்து 10,40,368 பேர் எழுதுகின்றனர்.
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை 3.37 சதவீதம் அதிகரித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை 1.01 சதவீதம் அதிகரித்துள்ளது.
தேர்வுகளைக் கண்காணிக்க சிறப்புப் பார்வையாளர்கள், பறக்கும் படைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
வினாத்தாள் கட்டுகள் 4 உதவி கண்காணிப்பாளர்களின் முன்னிலையில் பிரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பில் பார்வையற்றோர் 391 பேரும், கற்றலில் குறைபாடுடையவர்கள் 988 பேரும், காது கேளாதோர், வாய் பேச இயலாதோர் 225 பேரும், உடல் ஊனமுற்றோர் 904 பேரும், மன வளர்ச்சி, அறிவுத் திறன் குறைபாடுடையவர்கள் 147 பேரும் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் பார்வைற்ற 363 பேர் உள்பட மொத்தம் 2,066 பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்காக கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்
மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட மாணவர்களுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவங்குகிறது. இதில், 24 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, இந்த ஆண்டு, நாளை ஒரே நாளில் துவங்குகிறது. 10ம் வகுப்புக்கு, மார்ச் 26ம் தேதியும்; பிளஸ் 2வுக்கு, ஏப்ரல் 20ம் தேதியும் தேர்வுகள் முடிகின்றன. இந்த ஆண்டு, 10ம் வகுப்பில், 8,17,941 மாணவர்; 5,55,912 மாணவியர் என மொத்தம், 13,73,853 பேர் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2வில், 6,07,383 மாணவர்; 4,32,985 மாணவியர் என மொத்தம், 10,40,368 பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில், 1 சதவீத மாணவர்கள் அதிகமாக தேர்வெழுதுகின்றனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை, அந்தந்த மண்டல அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.

Saturday, January 10, 2015

மார்ச் 2-ல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வு தொடக்கம்
சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள், வரும் மார்ச் 2-ஆம் தேதி தொடங்குகின்றன. இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 26-ஆம் தேதி வரையிலும், 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 17-ஆம் தேதி வரையிலும் நடை பெறும். பத்தாம் வகுப்பு மாணவர்கள் 13 லட்சம் பேரும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 10 லட்சம் பேரும் தேர்வு எழுத உள்ளனர் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.