Sunday, October 21, 2018

சி.பி.எஸ்.இ., அங்கீகார விதிமுறைகள் மாற்றம்! மாநில அரசுகளுக்கு கிடைத்தது அதிகாரம்

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகாரம் பெறும் வழிமுறைகளில், மாநில அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 'சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கல்வி கட்டணத்தை உறுதி அளித்த பின்பே, இணைப்பு வழங்கப் படும்' என, கிடுக்கிப்பிடி நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்குகின்றன. பள்ளிகளுக்கான பாடத்திட்ட இணைப்பு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வழியாக வழங்கப்படுகிறது.அதற்கு முன், சம்பந்தப்பட்ட பள்ளிகள், மாநில அரசிடம் இருந்து, தடையில்லா சான்றிதழ் பெற்று, அதை சி.பி.எஸ்.இ., வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்பே, சி.பி.எஸ்.இ.,யின் இணைப்பு வழங்கப்படும்.
இவ்வாறு பாடத்திட்ட இணைப்பு பெறும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், முழு அங்கீகாரத்தை யும் மத்திய அரசிடம் பெற்றதாக கருதி, மாநில அரசின் கொள்கைகளுக்கும், அறிவுறுத்தல் களுக்கும் கட்டுப்படுவதில்லை.மாநில அரசின் கல்வி கட்டண நிர்ணயத்தையும் பின்பற்றுவது இல்லை. இந்த வகையில், தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், கட்டுப்பாடின்றி தன்னிச்சையாக செயல்பட்டதால், தமிழக பள்ளி கல்வி சார்பில், அனைத்து பள்ளிகளுக் கும் சமீபத்தில் எச்சரிக்கை, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
அதில், 'அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், உள் கட்டமைப்புக்கான அங்கீகாரத்தை, மாநில அரசிடம் பெற வேண்டும். இல்லாவிட்டால் அந்த பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,க்கு அறிவிக்கப் பட்டு, பாடத்திட்ட இணைப்பு ரத்து செய்யப் படும்' என, எச்சரிக்கப் பட்டது.இந்த பிரச்னை, பல்வேறு மாநிலங்கள் வழியே, மத்திய மனித வள மேம்பாட்டு துறைக்கும் எடுத்து செல்லப்பட்டது.
இதையடுத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு,
பல்வேறு கிடுக்கிப்பிடி நிபந்தனைகளை, மத்திய மனிதவள அமைச்சகம் விதித்துள்ளது. இதற்கான அறிவிப்புகளை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர், நேற்று டில்லியில் அறிவித்தார்.
அறிவிப்புகள் வருமாறு:
* சி.பி.எஸ்.இ., வாரியத்தில், 8,000 விண்ணப்பங் கள் மீது,முடிவுகள் எடுக்க பட்டு, 2,000 பள்ளிகளுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்கப் பட்டுள்ளது. இவற்றில் பல விண்ணப்பங்கள், 11 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளவை
* பல பள்ளிகள் தவறான தகவல்களை, சி.பி.எஸ்.இ.,க்கு வழங்குகின்றன. எனவே, பள்ளி களின் உள்கட்டமைப்பு வசதிகளை, இனி, சி.பி.எஸ்.இ., ஆய்வு செய்யாது. சம்பந்தப்பட்ட பள்ளிகளின் கல்வி கற்பித்தல் திறன்களையே சோதிக்கும். மாநில அரசே, சி.பி.எஸ்.இ., பள்ளி களின் உள் கட்டமைப்பு குறித்து, இனி ஆய்வு நடத்தும்
* சி.பி.எஸ்.இ., இணைப்பு பெறும் பள்ளிகள், மாவட்ட கல்வி அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற வேண்டியது கட்டாயம். மாநில பள்ளி கல்வி அதிகாரிகள், பள்ளியில் உரிய ஆய்வுகள் நடத்தி,இந்த சான்றிதழைவழங்குவர்.
* சி.பி.எஸ்.இ., அந்தஸ்து பெற விண்ணப்பிக்கும் பள்ளிகளுக்கு, விளையாட்டு செயல்பாடு கட்டாயம் ஆக்கப்படும். இதுகுறித்து, உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும்
* இணைப்பு கேட்கும் பள்ளிகள், தங்கள் பள்ளியில் வசூலிக்க உள்ள கட்டணத்தை, எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும். 'இந்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்க மாட்டோம்' என, உறுதி அளிக்க வேண்டும். அவ்வாறு வசூலித்தால், அந்த பள்ளிகளின் இணைப்பு அந்தஸ்து, உடனே ரத்து செய்யப்படும்
* தங்கள் பள்ளி மாணவர்களை,குறிப்பிட்ட நிறுவனம் அல்லது கடைகளில் புத்தகம், சீருடை, ஷூ உள்ளிட்டவை வாங்க வேண்டும் என, நிர்ப்பந்தம் செய்யக் கூடாது. இதுகுறித்து புகார் எழுந்தால், இணைப்பு அந்தஸ்து ரத்தாகும்
* கடந்த, 2016ம் ஆண்டு, இரண்டு கோடி புத்தகங்கள், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி
கவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி.,யால் அச்சடிக்க பட்டது. அரசின் வலியுறுத்தலால், பெரும் பாலான பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி., புத்தகத்தை பயன்படுத்த துவங்கின. அதனால், புத்தகங்களின் தேவை, ஆண்டுக்கு 6 கோடியாக அதிகரித்துள்ளன.இவ்வாறு, ஜாவடேகர் அறிவித்துள்ளார்.
'நீட்' தேர்வுக்கு ஆங்கிலம் கட்டாயம்
''மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு, ஆங்கில மொழி தெரிந்திருப்பது அவசியம்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
'நீட்' நுழைவுத் தேர்வை, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,க்காக, மத்திய மனித வள அமைச்சகம் நடத்துகிறது. இந்த தேர்வை, இதுவரை சி.பி.எஸ்.இ., நடத்தி கொடுத்தது. இந்த ஆண்டு முதல், தேசிய தேர்வு முகமை யான, என்.டி.ஏ., நடத்த உள்ளது. மே, 5ல், நடக்க உள்ள தேர்வுக்கு, நவ., 1ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கும். இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின் படி, நீட் தேர்வுக்கு ஆங்கிலம் தெரிய வேண்டியது அவசியம் என கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வை எந்த மொழியில் நடத்த வேண்டும்; வினாத்தாளை மொழி மாற்றம் செய்வது போன்றவற்றை, சி.பி.எஸ்.இ.,யோ அல்லது என்.டி.ஏ.,வோ முடிவு செய்வதில்லை. மருத்துவ கவுன்சில் தான் முடிவு செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.'நீட் தேர்வில் மொழி மாற்றம் சரியில்லை' என, தமிழகத்தில் கோரிக்கை எழுந்த நிலையில், இந்த அறிவிப்பு வழியாக, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Get Detailed information about all Top management Colleges and Free Career Guidance by College Disha https://www.collegedisha.com/engineering-colleges

    ReplyDelete